விலைக்கு வாங்க யாரும் இல்லை: அப்புறப்படுத்தவும் வழி இல்லை: கஜா புயலில் விழுந்த தென்னை மரங்கள் எரிப்பு


விலைக்கு வாங்க யாரும் இல்லை: அப்புறப்படுத்தவும் வழி இல்லை: கஜா புயலில் விழுந்த தென்னை மரங்கள் எரிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 10:45 PM GMT (Updated: 6 Aug 2019 7:17 PM GMT)

கஜா புயலில் விழுந்த கிடந்த தென்னை மரங்களை வாங்க யாரும் வராததாலும், அப்புறப்படுத்தவும் வழி இல்லாததால் சாலையோரங்களில் குவியல், குவியலாக வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் கஜா புயல் வீசியது. இந்த புயல் நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கும், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியது.

இந்த புயலுக்கு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. மா, பலா, புளியமரம் உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்களும் முறிந்து விழுந்தன. இந்த பகுதிகளில் உள்ள அனைத்து மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன.

இவைகளை சீரமைப்பதற்காகவே பல மாதங்கள் ஆகின. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை அகற்றுவதற்கும் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஏற்கனவே தென்னை மரங்களை பறிகொடுத்து வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், விழுந்த மரங்களை அகற்றுவதற்கும் சிரமப்பட்டனர். பல பகுதிகளில் இருந்து செங்கல்சூளையில் பயன்படுத்துவதற்காக தென்னை மரங்களை வாங்கிச்சென்றனர். சில பகுதிகளில் விழுந்த தென்னை மரங்களை எடுத்துச்செல்வதற்கு கூட யாரும் முன்வரவில்லை.

பல பகுதிகளில் வேளாண்மைத்துறை அதிகாரிகளே மர வியாபாரி களுடன் பேசி மரம் அறுக்கும் எந்திரங் களுடன் அவற்றை அறுத்து அப்புறப் படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பல இடங்களில் தென்னை மரங்கள் அறுக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும் கிராமப்புற பகுதிகளை யொட்டியுள்ள இடங்களில் சாய்ந்த மரங்கள் இன்னும் அகற்றப்படாமலே கிடக்கின்றன.

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதிகளில் கிராமப்புற பகுதிகளில் பல வயல்களில் விழுந்த தென்னை மரங்கள் அகற்றப்படாமல் கிடந்தன. இவற்றை விவசாயிகளே கஷ்டப்பட்டு அகற்றினர். அவற்றை வயலின் ஓரங்களில் அல்லது பொதுவான ஒரு இடத்தில் கொண்டு வந்து குவித்து வைத்து இருந்தனர். பல இடங்களில் தென்னை மரங்களை துண்டு, துண்டுகளாக அறுத்துக்கொண்டு வந்து சாலையோரம் குவித்து வைத்தனர். அவ்வாறு வைக்கப்பட்டது தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாலையோரம் தென்னை மரங்கள் எரிந்தும், எரியாமலும் கிடப்பதை காண முடிகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “பல ஆண்டுகளாக நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த தென்னை மரங்கள் நொடிப்பொழுதில் புயல் காற்றினால் சாய்ந்து விழுந்தன. இதில் இருந்து நாங்கள் எப்படி மீண்டு வருவது என்று தெரியாத நிலையில் இவற்றை அகற்ற கூட நாங்கள் சிரமப்பட்டோம். இதனை யாரும் வாங்காத நிலையில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் வயலில் கிடந்ததை அப்புறப்படுத்தினால் தான் மாற்றுப்பயிர் செய்ய முடியும் என்பதால் அவற்றை அகற்றினோம்”என்றனர்.

Next Story