ஸ்ரீவைகுண்டம், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு - யார் அவர்? போலீசார் விசாரணை


ஸ்ரீவைகுண்டம், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு - யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Aug 2019 10:00 PM GMT (Updated: 6 Aug 2019 10:37 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் தாமிரபரணி ஆற்றின் திருமஞ்சன படித்துறை அருகில் நேற்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக மிதந்தார். அவர் ஜட்டி மட்டும் அணிந்து இருந்தார். அங்கு படித்துறையில் சந்தன நிறத்தில் கட்டம் போட்ட சட்டை, பனியன், செருப்பு ஆகியவை இருந்தது. எனவே அவர் தனது ஆடைகளை கழட்டி வைத்து விட்டு, ஆற்றில் குளிக்க சென்றபோது, ஆழமான பகுதியில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் திருமஞ்சன படித்துறையில் அதிக ஆழமாக இருப்பதால், அங்கு கடந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கர விழாவில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனவே அங்கு ‘குளிக்க தடை செய்யப்பட்ட ஆழமான பகுதி’ என்று எச்சரிக்கை பலகைகளை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story