தீவைத்து எரிக்கப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது; கணவரிடம் போலீசார் விசாரணை


தீவைத்து எரிக்கப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது; கணவரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:30 PM GMT (Updated: 7 Aug 2019 8:30 PM GMT)

காரிமங்கலம் அருகே தீவைத்து எரிக்கப்பட்ட பெண் பெங்களூருவை சேர்ந்தவர் என அடையாளம் தெரிந்தது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்,  

காரிமங்கலம் அருகே தீவைத்து எரிக்கப்பட்ட பெண் பெங்களூருவை சேர்ந்தவர் என அடையாளம் தெரிந்தது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் டீ-குண்டு அருகே உள்ள கும்பாரஅள்ளி ரோட்டில் கடந்த மாதம் 28-ந்தேதி சாலையோரம் ஒரு இளம்பெண் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தீவைத்து எரிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சுமார் 30 முதல் 32 வயது இருக்கும் என்றும், அவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் பெங்களூரு அருகே உள்ள நெலமங்கலா பகுதியை சேர்ந்த கவுரம்மாள்(வயது40) என அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் பெங்களூரு சென்று கவுரம்மாளின் கணவர் லோகேஷ்(45) என்பவரை காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது குடும்ப தகராறு காரணமாக லோகேஷ் மனைவி கவுரம்மாளை, நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொலை செய்து, பிணத்தை காரில் கொண்டு வந்து காரிமங்கலம் பகுதியில் தீவைத்து எரித்தது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், லோகேசை ரகசிய இடத்தில் வைத்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லோகேசின் நண்பரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் லோகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இவர்கள் கைது செய்யப்பட்டால் தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story