இறால் பண்ணைகளை அகற்றக்கோரி, மீன்வளத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - பரங்கிப்பேட்டையில் பரபரப்பு


இறால் பண்ணைகளை அகற்றக்கோரி, மீன்வளத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - பரங்கிப்பேட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 10:30 PM GMT (Updated: 7 Aug 2019 8:48 PM GMT)

இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை,

கிள்ளை அருகே உள்ள பொன்னந்திட்டு கிராம பகுதியில் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் அருகிலேயே 5-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கால்வாயில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதாகவும், இறால் பண்ணை கழிவுகளை பக்கிங்காம் கால்வாயில் விடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இறால் கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலப்பதால், அதை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி 7-ந் தேதி பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அரசியல் கட்சியினர் அறிவித்திருந்தனர். இருப்பினும் இறால் பண்ணைகளை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு தலைமையில் தி.மு.க. நிர்வாகி செந்தில்குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் விஸ்வநாதன், ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் நேற்று காலை பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கோஷம் எழுப்பியபடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்து வந்த கடலூர் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகாதேவி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலுவலகத்துக்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இறால் பண்ணைகளை அகற்றுவது தொடர்பாக இன்னும் 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகவும், அதனால் தற்போது போராட்டத்தை கைவிடுமாறும் கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு கூறுகையில், இன்னும் 15 நாட்களுக்குள் இறால் பண்ணைகளை அகற்றாவிட்டால், இதே அலுவலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Next Story