தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு,பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு


தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு,பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 7:38 PM GMT)

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது.

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பவானி ஆறு, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. தற்போது நீலகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது. அதனால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 705 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 68.05 அடியாக இருந்தது.

இந்த நிலையில் நீலகிரி மற்றும் ஊட்டி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நேற்றும் நீர்வரத்து அதிகரித்தது. பகல் 11 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்தது. இது மதியம் 12 மணி அளவில் 44 ஆயிரத்து 94 கனஅடியாகவும், 1 மணி அளவில் 67 ஆயிரத்து 149 கனஅடியாகவும் அதிகரித்தது. இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.

வினாடிக்கு 34 ஆயிரத்து 927 கனஅடி தண்ணீர் வந்தது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 அடி உயர்ந்து 72.93 அடியை தொட்டது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 200 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டும் என்று தெரிகிறது.

Next Story