அஞ்செட்டி அருகே கோவிலின் முன்பு 4 சிலைகளை வைத்து சென்ற மர்ம நபர்கள் ; போலீசார் விசாரணை
அஞ்செட்டி அருகே கோவிலின் முன்பு 4 சிலைகளை மர்ம நபர்கள் வைத்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சித்தாண்புரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வழியாக நேற்று காலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவிலின் முன்பு ஏழுமலையான், விநாயகர், மாரியம்மன், சிவலிங்கம் ஆகிய சிலைகளும், வெள்ளியால் செய்யப்பட்ட குடையுடன் கூடிய வேலும் இருந்தன.
இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 சிலைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த சிலைகளை கோவிலின் முன்பு வைத்து சென்ற மர்ம நபர்கள் யார்? என தெரியவில்லை. இந்த சிலைகளை மர்ம நபர்கள் கடத்தி வந்து இப்பகுதியில் போட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து, அதனை கோவில் முன்பு போட்டு சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story