கோத்தகிரியில், குடியிருப்பு பகுதியில் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள் - பொதுமக்கள் பீதி
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் ஆகியவை பசுமைக்கு திரும்பியுள்ளன. இதனால் காட்டெருமைகள் நடமாட்டம் நகர பகுதியில் வெகுவாக அதிகரித்துள்ளது.
காட்டெருமைகள் சர்வ சாதரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் நடமாடி வருகின்றன. இதன் காரணமாக மனித-வன விலங்குகள் ஏற்படும் அபாயம் உள்ளது.கடந்த இரு வாரங்களுக்கு முன் மிளிதேன் கிராமத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளியை காட்டெருமை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த நிலையில் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளான கார்சிலி, காம்பாய் கடை, ஹேப்பி வேலி, வியூ ஹில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், சி.எஸ்.ஐ குழந்தைகள் நல காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கும்பலாக உலா வந்த வண்ணம் உள்ளன. மேலும் காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வருவதால், பொதுமக்களால் தனது குட்டிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்ற அச்சத்தால் காட்டெருமைகள் பொதுமக்களை துரத்துகிறது.
காட்டெருமைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் பகலிலும் வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளனர். எனவே குட்டிகளுடன் உலா வரும் காட்டெருமைகளை குடியிருப்பு பகுதியிலிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story