சேதம் அடைந்த வீட்டை கஜா புயல் நினைவு வீடாக மாற்றிய விவசாயி- நிவாரணம் கிடைக்காததால் விரக்தி


சேதம் அடைந்த வீட்டை கஜா புயல் நினைவு வீடாக மாற்றிய விவசாயி- நிவாரணம் கிடைக்காததால் விரக்தி
x
தினத்தந்தி 9 Aug 2019 10:45 PM GMT (Updated: 9 Aug 2019 11:55 PM GMT)

நிவாரணம் கிடைக்காத விரக்தியில் புயலில் சேதம் அடைந்த தனது வீட்டை கஜா புயல் நினைவு வீடாக விவசாயி ஒருவர் மாற்றி உள்ளார்.

முத்துப்பேட்டை,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களை கஜா புயல் உருக்குலைத்தது. புயலின்போது திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை பகுதி கடுமையான சேதங்களை சந்தித்தது. முத்துப்பேட்டை, உதயமார்த்தாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் புயலில் சாய்ந்தன.

இதனால் முத்துப்பேட்டை பகுதி தென்னை விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்தனர். புயலில் இழப்புகளை சந்தித்த முத்துப்பேட்டை பகுதி தென்னை விவசாயிகள் பலருக்கு நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பலர் சிரமத்தில் உள்ளனர். உதயமார்த்தாண்டபுரம் மாரியப்பா நகரை சேர்ந்த தென்னை விவசாயி அழகிரிசாமி (வயது71) என்பவரும் புயலில் தனது தென்னை மரங்களை இழந்தார். இவருடைய ஓட்டு வீடு புயலில் சேதம் அடைந்தது.

கஜா புயலில் வீடு சேதமானதற்கும், விழுந்த தென்னை மரங்களுக்கும் உரிய நிவாரணம் அழகிரிசாமிக்கு இதுவரை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அழகிரிசாமி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவில் தனக்கும், தன்னை போன்று புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளார்.

ஆனால் எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதையடுத்து முதல்-அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். ஆனாலும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அழகிரிசாமி நிவாரணம் கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து புயலில் சேதம் அடைந்த தனது வீட்டை புயல் நினைவு வீடாக மாற்றி உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு பேனரை தனது வீட்டின் முன்பு அவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story