திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 47 பேர் பத்திரமாக மீட்பு


திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 47 பேர் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 10 Aug 2019 10:30 PM GMT (Updated: 10 Aug 2019 3:57 PM GMT)

திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 47 பேரை வருவாய்த்துறையினர் மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்கவைத்தனர்.

திருப்பூர்,

கோவை, திருப்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. திருப்பூர் அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மங்கலம் ரோட்டில் இருந்து காலேஜ் ரோடு சென்றவர்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி நடராஜா தியேட்டர் பாலம் வழியாக சென்றனர்.

அதுபோல் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம் வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பாலத்தின் மேல் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலமாக ஆற்றில் அடித்து வரப்பட்ட கழிவுகளை அகற்றினார்கள். இதனால் பாலத்தின் அடியில் வெள்ளம் தடையில்லாமல் சென்றது.

நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை நடராஜா தியேட்டர் பாலம் அருகே நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு தெற்கு தாசில்தார் மகே‌‌ஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இரவு நேரத்தில் தண்ணீர் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

இந்தநிலையில் இரவு 8 மணி அளவில் அப்பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதைத்தொடர்ந்து அங்குள்ள 16 குடும்பத்தை சேர்ந்தவர்களை உடனடியாக வீட்டை விட்டு தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் பாதுகாப்புடன் வெளியேற்றினார்கள். அதன்படி 12 ஆண்கள், 18 பெண்கள், 17 குழந்தைகள் என மொத்தம் 47 பேரை பத்திரமாக அதிகாரிகள் மீட்டு கருவம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களுக்கு இரவு உணவு வசதி செய்து கொடுக்கப்பட்டது. நேற்று காலையும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நொய்யல் ஆற்று நீரின் அளவு நேற்று குறைந்ததை தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். சில வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வெளியேற்றினார்கள்.

நொய்யல் ஆற்றில் வெள்ளம் குறைந்தபோதிலும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து நேற்றும் தடைபட்டது. அதுபோல் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம் வழியாகவும் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

பூலவாரி சுகுமார் நகரில் ஓடை கரையோரம் உள்ள வீடுகளின் சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அந்த வீடுகளில் குடியிருப்பவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று, பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அணைக்காடு தடுப்பணையில் நிரம்பி சென்ற வெள்ளத்தை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். சிலர் வெள்ளத்தை பார்வையிடுவதுடன் செல்பியும் எடுத்து சென்றனர். 2 நாட்களுக்கு பிறகு நேற்று மாநகரில் வெயில் அடித்தது. இதனால் பல வீடுகளில் பெண்கள் துணிகளை துவைத்து வெயிலில் காய வைத்ததை காண முடிந்தது.

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் மூளி குளம் உள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்லும்போது, ரோட்டரி மின் மயானம் அருகே உள்ள மதகு திறக்கப்பட்டு கிளை வாய்க்கால் வழியாக இந்த குளத்துக்கு தண்ணீர் செல்வது வழக்கம்.

நேற்று வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் மதகு பகுதி மற்றும் கிளை வாய்க்கால் பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆற்றில் வெள்ளத்தின் அளவு குறைந்து விட்டதால் மூளி குளத்துக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

Next Story