ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்


ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2019 11:00 PM GMT (Updated: 10 Aug 2019 9:13 PM GMT)

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்லூரிக்கு ஆதரவாக சுமார் 400 மாணவ-மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடையாறு,

சென்னை அடையாறு காந்திநகரில் தனியாருக்கு சொந்தமான தூயபேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூயபேட்ரிக் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியை ஒட்டி உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 5½ ஏக்கர் நிலத்தை கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து, சுற்றிலும் சுவர் எழுப்பி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும், அது சம்பந்தமான வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாணவ-மாணவிகள் போராட்டம்

இதையடுத்து நேற்று காலை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள சுற்றுச்சுவரை இடித்து அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளுடன் அங்கு வந்தனர்.

பாதுகாப்புக்காக அடையாறு துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டிஜெயசீல், மனோகர் உள்ளிட்ட சுமார் 300 போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்லூரிக்கு ஆதரவாக அக்கல்லூரியை சேர்ந்த சுமார் 400 மாணவ-மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் சிலர் கல்லூரி சுவர் மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு போலீஸ் வாகனங்களும், மாநகர பஸ்களும் வரவழைக்கப்பட்டதால் மாணவர்கள் கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கல்லூரி நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து முதல்கட்டமாக மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிஉள்ள சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

முன்னதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசுக்கு சாதகமாக தீர்ப்பு

தனியார் கல்லூரி நிர்வாகம் அரசுக்கு சொந்தமான சுமார் 5½ ஏக்கர் நிலத்தை சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ளனர். 11 வருட சட்டநடவடிக்கைகள் மூலம் தற்போது அரசுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது. அதனால் அந்த நிலத்தை அரசின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்த வந்துள்ளோம்.

சட்டப்படி தனியார் கல்லூரி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஆனால் மாணவர்களுக்கு எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் அவர்களை வைத்தே போராட்டம் நடத்துகிறார்கள்.

சட்டப்படி எதிர்கொள்வோம்

நகரத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.1,000 கோடி ஆகும். இந்த இடத்தை கையகப்படுத்தி பொது கட்டமைப்புகள் அமைக்க உள்ளோம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

சட்டப்படி அரசுக்கு சொந்தமான இந்த இடத்தின் பட்டா சென்னை மாநகராட்சி பெயரில் உள்ளது. இந்த இடத்தை அரசு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த கல்லூரி, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி கல்லூரி தரப்பில் கூறும்போது, “இந்த நில பிரச்சினை சம்பந்தமான வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 13-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. விடுமுறை நாளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென பிரச்சினைக்குரிய இடத்தை கைப்பற்ற வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பிரச்சினையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றனர்.

சைதை துரைசாமி முயற்சி

இது குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:-

1948-ம் ஆண்டு பாலசுப்பிரமணிய முதலியாரிடம் இருந்து 19 ஏக்கர் 66 சென்ட் நிலத்தை ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்துக்கு சென்னை மாநகராட்சி வாங்கியது. இந்த இடத்துக்கு பட்டா கேட்டு தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் 2003-ல் மயிலாப்பூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தது. ஆனால் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது எனக்கூறி அவர் நிராகரித்தார்.

பின்னர் இவர்கள் ஐகோர்ட்டுக்கு சென்று, நாங்கள் ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெறும் வரை எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என தடை உத்தரவு வாங்கினார்கள். சென்னையில் ஆர்.டி.ஓ. பதவியே கிடையாது. டி.ஆர்.ஓ. பதவிதான் உண்டு. இந்த உண்மையை எடுத்து சொல்லி, மாநகராட்சியின் சட்டத்துறை இந்த தடை உத்தரவை நீக்க கடந்த 2011-ம் ஆண்டுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் மேயரான உடன் துறை வாரியாக ஆய்வு செய்தபோது இத்தனை ஆண்டு காலம் இந்த தடை உத்தரவை ரத்து செய்யாதது ஏன்? என கேட்டபிறகுதான் சட்டத்துறை நடவடிக்கை எடுத்தது. அதற்கு பிறகு டி.ஆர்.ஓ.வும், நில நிர்வாக ஆணையரும் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவுக்கு எதிராக தூய பேட்ரிக் கல்வி நிறுவனம் கோர்ட்டில் மீண்டும் மனு அளித்தனர். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். பின்னர் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் பேரில்தான் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நான் எடுத்த நடவடிக்கையால்தான் இன்று கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த சொத்து மீட்கப்பட்டு, மாநகராட்சியின் சொத்தாக ஆக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story