திருவாடானை அருகே நாய்கள் கடித்து மான் சாவு


திருவாடானை அருகே நாய்கள் கடித்து மான் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2019 10:15 PM GMT (Updated: 11 Aug 2019 5:37 PM GMT)

திருவாடானை அருகே தண்ணீரை தேடி குடியிருப்புக்குள் வந்த மான் நாய்கள் கடித்ததால் இறந்தது.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் மான்கள் அதிகஅளவில் உள்ளன.போதிய மழை பெய்யாததால் கண்மாய்கள் அனைத்தும் கடும் வறட்சி காரணமாக வற்றி வறண்டு காணப்படுவதால் மான்கள் தண்ணீரை தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை வழக்கமாக வைத்துள்ளன. அப்படி தண்ணீரை தேடி வரும் மான்களை ஊருக்குள் சுற்றித்திரியும் நாய்கள் விரட்டி கடித்து விடுகின்றன. இதனால் இந்த தாலுகாவில் நாய்களிடம் சிக்கி அடிக்கடி மான்கள் அதிகஅளவில் இறந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் அஞ்சுகோட்டை பெரிய கண்மாய் பகுதியில் அதிகஅளவில் மான்கள் வசித்து வரும் நிலையில் அஞ்சுகோட்டை கண்மாய் பகுதியில் சுற்றித் திரிந்த பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீரை தேடி நேற்று கிராமத்திற்குள் வந்துள்ளது.

இதை பார்த்த நாய்கள் மானை விரட்டி கடித்துள்ளன. இதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட அப் பகுதி மக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் திருவாடானை தாசில்தார் சேகர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட மான் உடல் கூறு பரிசோதனைக்கு பின்னர் புதைக்கப்பட்டது.

Next Story