உடுமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதால் சுகாதார சீர்கேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


உடுமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதால் சுகாதார சீர்கேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Aug 2019 4:15 AM IST (Updated: 12 Aug 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிபட்டி,

மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டதை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். ஆனாலும் பல நடைமுறை சிக்கல்களால் பிளாஸ்டிக் பயன்பாட்டைத்தவிர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஓட்டல்களில் பார்சல் மூலம் உணவு விற்பனை செய்யும்பொழுது சாம்பார், ரசம், குருமா போன்ற பொருட்களை முன்பு பாலித்தீன் கவர்களில் வழங்கி வந்தனர். பாலித்தீன் தடைக்குப்பின்னர் வீடுகளிலிருந்து பாத்திரம் கொண்டு வந்து வாங்க வலியுறுத்தினார்.

ஆனால் பொதுமக்கள் அதற்கு தயாராக இல்லாத நிலையில் தற்பொழுது சில்வர் கவரைப்பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வகை கவர்கள் மக்கும் தன்மையுள்ளதா, தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளதா என்பது தெரியவில்லை. அதுபோல மண்டபங்கள் இல்லாமல் வெளியிடங்களில் நடத்தப்படும் விருந்துகள், விழாக்கள் போன்றவற்றில் தண்ணீர், பாயாசம், காபி போன்றவற்றை வழங்குவதற்கு வேறு மாற்றுவழி கிடைக்காத நிலையில் இன்றும் பிளாஸ்டிக் டம்ளர்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடுமலை பகுதியில் இவை தாராளமாக கிடைப்பதாகவும் தடை அமலிலுள்ளதால் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

மேலும் மளிகைக்கடைகளில் பயன்படுத்தி வந்த முடிச்சு கவர்கள் எனப்படும் பிளாஸ்டிக் கவர்கள் தடை பட்டியலில் உள்ளதால் தற்பொழுது பிபி கவர்கள் எனப்படும் பிளாஸ்டிக் கவர்களே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல வகையிலும் பிளாஸ்டிக் பயன்பாடு உடுமலை பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் மழைநீர் வடிகால்கள் மற்றும் சாக்கடைக்கால்வாய்களில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பாட்டில்கள் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் துப்புரவு பணியாளர்கள் மழைக்காலங்களில் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் பெய்த மழையில் பஸ் நிலையம் அருகில் ரவுண்டானா பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளே உடுமலை பகுதியில் அதிகரித்திருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு சாட்சியாக உள்ளது. எனவே அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story