பெரியகுளம் தூர்வாரும் பணிக்கு ரூ.1½ லட்சம் நிதி உதவி கிராம மக்கள் வழங்கினர்


பெரியகுளம் தூர்வாரும் பணிக்கு ரூ.1½ லட்சம் நிதி உதவி கிராம மக்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 7:43 PM GMT)

பேராவூரணி பெரிய குளம் தூர்வாரும் பணிக்கு கிராம மக்கள் ரூ.1½ லட்சம் வழங்கினர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெரியகுளம் உள்ளது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த குளம் தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது பெரிய குளம் தூர்வாரும் பணி கடந்த 45 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்ட கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை தொடங்கி விவசாயிகள் இளைஞர்கள் தங்கள் சொந்த பணத்தை கொண்டும், நன்கொடை மூலமாகவும் இந்த பெரியகுளத்தை தூர்வாரி வருகின்ற னர். முதற்கட்டமாக குளத்தை தூர்வாரிய மண்ணை கொண்டு, கரையைப் பலப் படுத்தி கரையோரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். தூர்வாரும் பணியில் பொக்லின் எந்திரம் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் இந்த செயலை தஞ்சை மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர்கள், உயர்நீதி மன்ற நீதிபதி உள்ளிட்ட பலர் நேரில் வந்து பாராட்டி சென்றுள்ளனர். மேலும், தூர்வாரும் பணிக்கு பல்வேறு தரப்பினரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பழைய பேராவூரணி கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கிராமத்தில் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த தொகை ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 535-ஐ கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.

நிதிஉதவியைப் பெற்றுக் கொண்ட கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தூர்வாரும் பணிக்காக பெருமளவில் நிதிஉதவி அளித்த பழைய பேராவூரணி கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

Next Story