கன்னிவாடி அருகே விபத்து, மினிவேன் கவிழ்ந்து 33 பெண் தொழிலாளர்கள் படுகாயம்


கன்னிவாடி அருகே விபத்து, மினிவேன் கவிழ்ந்து 33 பெண் தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 6:45 PM GMT)

கன்னிவாடி அருகே மினிவேன் கவிழ்ந்து 33 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

கன்னிவாடி, 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோனூர், பாப்பன்குளம் பகுதியில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் பெரியகோட்டையில் செயல்படும் செங்கல்சூளைக்கு மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை காரைக்குடியை சேர்ந்த பாண்டி (வயது 23) என்பவர் ஓட்டினார்.

திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி பெண் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.

இந்த விபத்தில் மினிவேனில் பயணம் செய்த செல்லமணி, மாரியம்மாள், சுமதி, முத்தம்மாள், சவுடம்மாள், பாக்கியம், முத்துலட்சுமி, அம்பிகா உள்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசார், பொதுமக்களின் உதவியுடன் படுகாயம் அடைந்த 33 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story