பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை: திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு


பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை: திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 9:30 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி,

பக்ரீத் பண்டிகையையொட்டி, தூத்துக்குடி ஈத்கா திடலில் நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமை தாங்கி தொழுகை நடத்தினார். தொடர்ந்து இமாம் ஷேக் உதுமான் தலைமையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி முஜிபுர் ரகுமான், உதவி இமாம் முகமது ரிபாய் உள்பட முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்து களை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று தூத்துக்குடியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. ஏழைகளுக்கு இறைச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

காயல்பட்டினம் கே.எம்.டி. ஆஸ்பத்திரி எதிரில் தமிழ்நாடு தவ்ஹீத் பேரவை சார்பில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் சதாம் உசேன் தொழுகை நடத்தி, குத்பா பேரூரை நிகழ்த்தினார்.

இதேபோல் காயல்பட்டினத்தில் உள்ள புது பள்ளி, செய்கு உசைன் பள்ளி, ஆறாம் பள்ளி, அப்பா பள்ளி, அருஷியா பள்ளி, கொடிமர சிறு நயினா பள்ளி, முகைதீன் பள்ளி, குருவித்துறை பள்ளி, ஹாஜி அப்பா பள்ளி, காட்டு தைக்கா பள்ளி, பெரிய பள்ளி உள்ளிட்ட 24 பள்ளிவாசல்களிலும், 60-க்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

தொழுகை முடிந்ததும், ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனால் காயல்பட்டினம் நகரம் விழாக்கோலம் பூண்டது.

கோவில்பட்டி டவுன் ஜாமியா பள்ளிவாசலில் இமாம் முகம்மது அலி பக்ரீத் சிறப்பு தொழுகையை நடத்தினார். பள்ளிவாசல் தலைவர் ஜிந்தா மதார், செயலாளர் ஹீமாயூன், பொருளாளர் பீர் மைதீன், ஆலோசகர்கள் அமானுல்லா கான், முகம்மது நயினார், அல்லா பிச்சை உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி எம்.ஜி.ஆர். நகர் நபி வழி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில், பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட பேச்சாளர் ஹசன் தொழுகையை நடத்தினார். உடன்குடி தாயிப் நகர் திடலில் இஸ்லாமிய வழிகாட்டி மையம், தக்வா மஸ்ஜித் சார்பில், பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோன்று உடன்குடி பெரிய தெரு, சிதம்பர தெரு, நயினாபிள்ளை தெரு, களம் புது தெரு, சுல்தான்புரம், புதுமனை, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதேபோன்று ஆழ்வார்திருநகரி மத்ரஸ்த்துர் ரகுமான் பள்ளிவாசல், ஆத்தூர் ஜூம்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

Next Story