சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி தயாரிக்கும் பணி தீவிரம்


சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:08 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் தேசிய கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை,

சுதந்திர தினம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளன. இதற்காக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிக்காக ஒத்திகையும் நடைபெற்று வருகிறது.

சுதந்திர தினத்தன்று அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கப்படும். இதற்காக புதுக்கோட்டையில் தேசிய கொடி தயாரிக்கும் பணியில் தையல் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் தயார் செய்யப்படும் தேசிய கொடிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொடிகள் தயாரிக்கும் பணி

இது குறித்து தேசிய கொடி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், கோவை பகுதியில் இருந்து துணியை வாங்கி வந்து, நாங்கள் தேசிய கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் அளவு மற்றும் தரத்திற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம். நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதால் மற்ற கொடிகள் தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டு, தேசிய கொடி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Next Story