ஸ்ரீபுரத்தில் புதிதாக நாராயணி ஆயுர்வேத மருத்துவமனை: மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோநாயக் திறந்து வைத்தார்


ஸ்ரீபுரத்தில் புதிதாக நாராயணி ஆயுர்வேத மருத்துவமனை: மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோநாயக் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Aug 2019 9:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:27 PM GMT)

வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நாராயணி ஆயுர்வேத மருத்துவமனையை மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோநாயக் திறந்து வைத்தார்.

வேலூர்,

வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆய்வகம் அமைந்துள்ளது. அதன் மற்றொரு அங்கமாக புதிதாக நாராயணி ஆயுர்வேத மருத்துவமனை ஸ்ரீபுரத்தில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு சக்தி அம்மா தலைமை தாங்கி அருளாசி வழங்கினார். கவுரவ விருந்தினராக சக்தி அம்மாவின் வெளிநாட்டு பக்தர் லின்சின்டர் கலந்து கொண்டார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மத்திய ஆயுஷ்துறை மந்திரி ஸ்ரீபத் யசோநாயக் கலந்து கொண்டு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் 50 பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் பிரத்யோக சிகிச்சை அறைகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வளாகம் மற்றும் தங்கும் அறைகளை பார்வையிட்டார். முன்னதாக சிறப்பு விருந்தினர், கவுரவ விருந்தினருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி, ஸ்ரீபுரம் தங்ககோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணிபீட மேலாளர் சம்பத், கோவில் அறங்காவலர்கள், நாராயணி மருத்துவமனை டாக்டர்கள், வெளிநாட்டு பக்தர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோநாயக் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆயுர்வேத, சித்தா, யுனானி, இயற்கை மருத்துவங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துறையாக இருந்தது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் ஆயுர்வேத, யோகா, இயற்கை, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை இணைந்து ‘ஆயுஷ்’ துறையாக மாற்றப்பட்டு, அதற்கு தனியாக மந்திரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுர்வேத, சித்தா, ஓமியாபதி உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை மத்திய அரசு, மாநில அரசுடன் செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 150 மாவட்டங்களில் 150 அரசு மருத்துவமனையில் ஆயுஷ் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இப்பிரிவு 50 படுக்கை அறை வசதியுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

மக்களிடம் ஆயுஷ் சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தனியார் மருத்துவமனைகள், பல்வேறு அமைப்புகள் ஆயுஷ் பிரிவை தொடங்க முன் வருகின்றன. மத்திய அரசு ஆயுஷ் பிரிவின் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது தொடர்பாக மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கருத்துகளை மத்திய அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்.

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு நிலை சகஜமான பின்னர் 144 தடை உத்தரவு முழுவதும் திரும்ப பெறப்படும். வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு, கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தொடர்ந்து தடை உத்தரவு நீடிக்கிறது. அங்கு இயல்பு நிலை திரும்பியதும், மத்திய ராணுவப்படைகள் திரும்ப பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story