செம்பக்கொல்லி ஆதிவாசி காலனியில், குடிசை வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்


செம்பக்கொல்லி ஆதிவாசி காலனியில், குடிசை வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 9:43 PM GMT)

செம்பக்கொல்லி ஆதிவாசி காலனியில் குடிசை வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.

கூடலூர்,

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி, ஒற்றவயல், குற்றிமூற்றி, செம்பக்கொல்லி உள்பட பல இடங்களில் காட்டுயானைகள் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் பலத்த மழையால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை காட்டுயானைகள் தின்றும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் செம்பக்கொல்லி ஆதிவாசி காலனியில் காட்டுயானை ஒன்று முகாமிட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த நஞ்சன்(வயது 55) என்பவரது குடிசை வீட்டை சேதப்படுத்தியது. அப்போது நஞ்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் மறுபக்கத்தில் பதுங்கி இருந்தனர். மேலும் காட்டுயானை குடிசை வீட்டையும், வீட்டுக்குள் இருந்த பொருட்களையும் நாசம் செய்தது. உடனே பயத்தில் அலறிய அவர்கள், பின்புற வாசல் வழியாக வெளியேறி உறவினர் வீடுகளில் சென்று தஞ்சம் அடைந்தனர். இதனிடையே காட்டுயானை குடிசை வீட்டை தரைமட்டமாக்கியது. மேலும் பாத்திரங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தியது.

இதுகுறித்து நஞ்சன் கூறும்போது, எங்கள் பகுதியில் குட்டிகளுடனும் காட்டுயானைகள் வந்து அட்டகாசம் செய்கின்றன. சேதம் அடைந்த குடிசை வீடு மற்றும் பொருட்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வனத்துறையினர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதேபோன்று செளுக்காடி பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு காட்டுயானை ஒன்று புகுந்தது. இதை கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் சாலை வழியாக காட்டுயானை உலா வந்தது. பின்னர் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்காமல் தேயிலை தோட்டங்கள் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

கடந்த 1 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காட்டுயானை ஊருக்குள் புகுந்து சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சூறையாடி சென்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எந்த நேரத்தில் காட்டுயானைகள் வருமோ? என்ற அச்சத்தில் நடமாட வேண்டிய நிலை உள்ளது. வழக்கமாக இரவில் வரும் காட்டுயானைகள் தற்போது பட்டப்பகலில் வர தொடங்கி விட்டன என்று வருத்தத்துடன் கூறினர்.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவு கோரஞ்சால், சப்பந்தோடு பகுதியில் 3 காட்டுயானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தின. 

Next Story