கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை


கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 10:15 PM GMT)

கிராமப்புறங்களில் உள்ள ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அகற்றப்படாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தில் கிராமப்புறங்களில் ஊருணிகள் நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதற்கு பயன்பட்டு வரும் நிலை இருந்து வந்தது. மழைக் காலங்களில் இந்த ஊருணிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களுக்கு பயன்படுவதோடு நிலத்தடி நீராதாரம் பெருக்குவதற்கும் பயன்பட்டு வந்தது. மேலும் பெரும்பாலான ஊருணிகள் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தன.

காலப்போக்கில் ஊருணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாத நிலை இருந்து வந்ததால் ஊருணிகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டு கட்டிடங்களும் கட்டப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஊருணிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஊருணிகள் எந்த காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கமும் நிறைவேறாமலேயே போய்விட்டது. அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஊருணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

அருப்புக்கோட்டை அருகே வன்னியன் ஊருணியில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அதேபோன்று அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள பிரமடை ஊருணியிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஊருணியை தூர்வாரும் பணி முடக்கம் அடைந்துள்ளது. இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஊருணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஊருணிகளில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்துவற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை நீர் நிலைகளான ஊருணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊருணிகளை கண்டறிந்து அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை தேக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் நிலத்தடிநீர் வளத்தை பெருக்க வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story