திருவண்ணாமலை அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த போது பரிதாபம்


திருவண்ணாமலை அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 5:55 PM GMT)

திருவண்ணாமலை அருகே லாரி - கார் மோதிய விபத்தில் பெங்களூருவில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவண்ணாமலை, 

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா கே.ஆர்.கார்டன் பகுதி 8-வது பிளாக்கை சேர்ந்தவர் ஸ்ரீநாத்ரெட்டி (வயது 55). கிரானைட் தொழிற்சாலை அதிபர். இவருடைய மனைவி சந்திராம்பாள் (50). இவர்களின் மகன் பரத், மகள் ஷாலினி. ஷாலினியின் கணவர் சந்தீப். இவர்கள் அனைவரும் நேற்று காலை காரில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் புதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஒட்டக்குடிசல் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி சென்ற லாரியும், காரும் திடீரென பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் காரின் முன்பக்கம் நொறுங்கி லாரிக்குள் சிக்கிக்கொண்டது. கட்டுப்பாட்டை இழந்த லாரி காரை இழுத்துச் சென்றபடி சாலையோரம் பள்ளத்தில் வயல்வெளிக்குள் இறங்கி நின்றது.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த ஸ்ரீநாத்ரெட்டி உள்பட 5 பேரும் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரில் உள்ளவர்கள் உயிரோடு இருக்கலாம் என கருதி அவர்களை மீட்க போராடினர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தாசில்தார் அமுலு ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

தீயணைப்பு வீரர்கள் முதலில் ஒரு பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் கார் கதவு சிக்கி இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் இரும்புத்தகடை வெட்டும் கருவியை கொண்டு கதவை வெட்டி மேலும் ஒருவரின் உடலை மீட்டனர்.

லாரியின் டயர் பகுதியில் காரின் முன்பகுதி சிக்கிக் கொண்டிருந்தது. அதில் தான் மீதம் உள்ள 3 பேரின் உடல்கள் சிக்கி இருந்தது. 3 பேரின் உடல்களை மீட்க போராடினர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே காயம் அடைந்த லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மாடர ஹள்ளியை சேர்ந்த ரஜினி காந்த்(27) சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பொக்லைன் எந்திரம் மூலம் லாரி தூக்கி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து 3 பேரின் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல்அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் அங்கு ஏராளமானவர்கள் கூடினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விபத்தை பார்த்த விவசாயி ஏழுமலை என்பவர் கூறுகையில், நான் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது செங்கம் நோக்கி சென்ற லாரி சாலையின் எதிர்திசையில் நடுவே உள்ள வெள்ளை கோட்டை தாண்டி சென்றது. அப்போது எதிரே வந்த காரும், லாரியும் திடீரென மோதி கொண்டன.

மோதிய வேகத்தில் காரை லாரி இழுத்துச் சென்றது. அருகில் வந்து பார்த்தபோது காரில் இருந்தவர்கள் மூச்சு பேச்சின்றி இறந்து கிடந்தனர் என்றார்.

Next Story