புழல் அருகே தொழிலதிபரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது


புழல் அருகே தொழிலதிபரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2019 5:30 AM IST (Updated: 14 Aug 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

புழல் அருகே தொழிலதிபரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவான ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (வயது 49). இவர் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த 9-ந்தேதி இரவு அவரது நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக காரில் சென்றார். புழல் அருகே மதுரவாயல் மேம்பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்து கிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து 2 பேர் காரில் ஏறிக் கொண்டனர்.

பின்னர் அவரை தாக்கி கும்மிடிப்பூண்டிக்கு கடத்தி சென்று அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறித்து கொண்டனர். பின்னர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இறங்கி தப்பி சென்றனர்.

இதையடுத்து, புழல் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதைவைத்து, செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் மல்லி மாநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (28), கிரான்ட்லைன் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (27), இவரது தந்தை மணலி புதுநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். மீஞ்சூர் ரெட்டி பாளையத்தை சேர்ந்த சுமன் (38) மற்றும் சிவராஜ் (36) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள செந்தில்குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story