பொள்ளாச்சி ரெயில் நிலையம் அருகில் கிடந்த பெருமாள் சிலை வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பு


பொள்ளாச்சி ரெயில் நிலையம் அருகில் கிடந்த பெருமாள் சிலை வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 7:31 PM GMT)

பொள்ளாச்சி ரெயில் நிலையம் அருகில் கிடந்த பெருமாள் சிலை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ரெயில் நிலையம் அருகே ராம்நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரெயில் நிலைய பகுதிக்கு வந்து செல்ல பொதுமக்களால் ஒரு பாதை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் சரக்கு ரெயில் நிறுத்தப்படும் பிளாட்பார பகுதிக்கு வந்து தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் முதியவர்கள் உள்பட பலரும் நடைபயிற்சி மேற்கெண்டனர்.

அப்போது அந்த பகுதி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஆறுமுகம் கூட்செட் பகுதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது, புதருக்குள் பெருமாள் சிலை கிடந்தது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சிலை சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதையடுத்து அந்த சிலையை அவர் வீட்டிற்கு எடுத்து சென்று தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தினார்.

அந்த சிலை ஒரு அடி உயரத்தில் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒரு கிலோ 380 கிராம் எடை இருந்தது. இதை தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஆறுமுகம் அந்த சிலையை கொண்டு வந்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தார். வருவாய் கோட்டாட்சியர் சிலை கிடைத்த விவரங்கள் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் சிலையை எடுத்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. எனவே கேமரா பதிவுகளை பார்த்தால் சிலை எப்படி? இங்கு வந்தது என்பது குறித்து தெரியவரும் என்றார்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ரெயில் நிலையம் அருகில் கிடந்த சிலையை கோவையில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்படும். அவர்கள் அந்த சிலை பழமையானதா? எப்போது செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்வார்கள் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசாரும் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொதுமக்கள் கொடுத்த பெருமாள் சிலையில், அதன் விலை குறித்த விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே திருச்சி போன்ற பகுதிகளில் சிலையை வாங்கி கொண்டு ரெயிலில் செல்லும் போது தவற விட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஐம்பொன் சிலை என்று நினைத்து திருடி வந்த மர்ம ஆசாமிகள் வெண்கல சிலை என்று தெரிந்ததும் வீசி சென்று இருக்கலாம். எனவே அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story