தொழிலாளர் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு, அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 10 இடங்களில் நடந்தது


தொழிலாளர் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு, அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 10 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 14 Aug 2019 4:30 AM IST (Updated: 14 Aug 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அமுது தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், துணை பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது, ஆயிரம் நாட்களுக்கு மேல் தொடர் பணி செய்த தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை தேனாம்பேட்டை சொசைட்டிக்கு தொழிலாளியிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக அவரிடம் திருப்பி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் கதிர்வேல், பெரியசாமி மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க கொடிகளை ஏந்தியபடி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

Next Story