மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணைக்கு சென்ற போது மாயமான அண்ணனை மீட்டு தரக்கோரி வாலிபர் தர்ணா + "||" + When the police went to investigate Restore the magic brother youth Darna

போலீஸ் விசாரணைக்கு சென்ற போது மாயமான அண்ணனை மீட்டு தரக்கோரி வாலிபர் தர்ணா

போலீஸ் விசாரணைக்கு சென்ற போது மாயமான அண்ணனை மீட்டு தரக்கோரி வாலிபர் தர்ணா
போலீஸ் விசாரணைக்கு சென்ற போது மாயமான அண்ணனை மீட்டு தரக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள அ.வெள்ளோடு கோம்பையை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருடைய மகன் மார்க் யாகப்பன் (வயது 28). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடர்பான கூட்டம் நடந்தது. அப்போது மார்க் யாகப்பன், அவருடைய சித்தப்பா பீட்டர் ஆகியோர் தகராறு செய்ததாக ஊர் நிர்வாகிகள் அம்பாத்துரை போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் 2 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி ஏ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவின் போது மார்க் யாகப்பன் மீன் வியாபாரம் செய்தார். அப்போது திடீரென அங்கு வந்த போலீசார், மார்க் யாகப்பனை மீண்டும் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரை மீட்டு தரும்படி மார்க் யாகப்பனின் மனைவி மெர்சி, தாயார் மங்களம், தம்பி ஆரோ ஸ்டாலின் ஆபிரகாம் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏ.வெள்ளோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் மாயமான மார்க் யாகப்பன் மீன் வியாபாரம் செய்த இடத்தில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் பொதுஇடத்தில் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறி 3 பேரையும் விடுவித்தனர். இந்த நிலையில் மாயமான மார்க் யாகப்பனின் தம்பி ஆரோ ஸ்டாலின் ஆபிரகாம் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் மார்க் யாகப்பனை கண்டுபிடித்து தரும்படி அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பதாகையை ஏந்தியபடி, மாயமான தனது அண்ணனை மீட்டு தரவேண்டும். மார்க் யாகப்பனை கைது செய்ததால் விற்பனை செய்யப்படாமல் அழுகிய 300 கிலோ மீனுக்கு இழப்பீடு தரவேண்டும் என்று கூறி கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாடிக்கொம்பு போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.