சோழிங்கநல்லூரில் 26-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை


சோழிங்கநல்லூரில் 26-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 9:29 PM GMT)

சோழிங்கநல்லூரில் 26-வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் என்ஜி னீயர் தற்கொலை செய்து கொண்டார்.

சோழிங்கநல்லூர்,

ஆந்திரமாநிலம், முசிறி மாவட்டம், மடகு கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரராவ் (வயது 32). இவர் துரைப்பாக்கத்தில் தங்கி தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையானதால் வேலைக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவான்மியூர் நியூ கடற்கரையில் இருந்து ஆட்டோவில் சோழிங்கநல்லூருக்கு வந்த ஈஸ்வரராவ் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றதாக தெரிகிறது.

பின்னர் அங்கிருந்து அதே ஆட்டோவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். உறவினர்களும் இங்கு வரவேண்டாம் என கூறியதால் பின்னர் மறுபடியும் அதே ஆட்டோவில் நள்ளிரவு 12 மணியளவில் சோழிங்கநல்லூரில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். ஆட்டோ டிரைவரிடம் கீழேயே இருக்க சொல்லிவிட்டு 26-வது மாடிக்கு சென்ற ஈஸ்வரராவ் அங்கிருந்து கீழே குதித்தார்.

சத்தம் கேட்டு காவலாளிகள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரராவ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இதுபற்றி செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு தங்கி இருந்த ஒருவர் மூலம் ஈஸ்வரராவ் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஜிம்மிற்கு அடிக்கடி செல்வார் என தெரியவந்தது.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும், மேலும் மதுபோதையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து செம்மஞ்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story