மாவட்ட செய்திகள்

வளசரவாக்கத்தில் டாக்டர் வீட்டில் 130 பவுன் நகை கொள்ளை + "||" + Doctor's home jewelry robbery

வளசரவாக்கத்தில் டாக்டர் வீட்டில் 130 பவுன் நகை கொள்ளை

வளசரவாக்கத்தில் டாக்டர் வீட்டில் 130 பவுன் நகை கொள்ளை
வளசரவாக்கத்தில், ஓமியோபதி டாக்டர் வீட்டில் 130 பவுன் நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் செய்து உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோடு 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 56). ஓமியோபதி டாக்டர். சென்னை, மதுரை, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கிளனிக் நடத்தி வருகிறார். இதனால் அடிக்கடி மருத்துவம் பார்க்க வெளியூர் சென்றுவிடுவார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மதுரை சென்றுவிட்டார். நேற்று வளசரவாக்கம் வந்தார். அப்போது தனது வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்து இருந்த 130 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உதவி கமிஷனர் மகிமைவீரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கொள்ளை நடந்த டாக்டர் வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது.

பல மாதங்களாக வீடு பூட்டியே கிடப்பதால் வீடு முழுவதும் ஒட்டடை மற்றும் தூசி படிந்து காணப்பட்டது. வீட்டின் அறையில் உள்ள தண்ணீர் குழாய் லைன்கள் அறுத்து எடுக்கப்பட்டு இருந்தது. அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தபோது டாக்டர் தங்கதுரை வீட்டை காலி செய்து சில மாதங்கள் ஆவதால் பூட்டியே கிடந்ததாக தெரிவித்தனர்.

டாக்டர் தங்கதுரை வீட்டை காலி செய்யும்போது எந்த பொருட்களையும் வைக்காமல் அனைத்தையும் எடுத்துச்சென்ற நிலையில், ஆட்கள் இல்லாத வீட்டில் 130 பவுன் நகைகளை மட்டும் வைத்து இருந்ததாக சொல்வது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் என்னென்ன நகைகள் கொள்ளைபோனது என்ற விவரத்தை கேட்டால் அது குறித்த உரிய தகவல்கள் தராமல் இருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‘250’ என்ற பெயரில் டாக்டர் தங்கதுரை சொந்தமாக சினிமா படம் எடுத்ததாகவும், அந்த பணிகள் முடிவடையாமல் உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, நகைகள் கொள்ளை போனதாக அவர் நாடகம் ஆடுகிறாரா? அல்லது உண்மையிலேயே பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை, பொருட்களை கொள்ளையடித்தனரா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.