மாவட்ட செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டது - எச்.விஸ்வநாத் குற்றச்சாட்டு + "||" + Were disqualified 17 MLA's phones were recorded - H Vishwanath Allegation

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டது - எச்.விஸ்வநாத் குற்றச்சாட்டு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டது - எச்.விஸ்வநாத் குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டது என்று எச்.விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
மைசூரு, 

மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எச்.விஸ்வநாத். ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவரான இவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மைசூருவில் எச்.விஸ்வநாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பாது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க அரசும், ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினரும் சாமர்த்தியமாக செயல்பட்டனர். மழை-வெள்ளத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்-மந்திரியும், மத்திய மந்திரிகளும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை சமாளிக்க அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு மற்றும் பொதுமக்களும் இணைந்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக வீடுகளை அரசு கட்டிக்கொடுக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசுக்கு ஒத்துழைப்பதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு அவருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

கர்நாடகம் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவரின் போனை திருட்டுத்தனமாக ஒட்டுகேட்பது என்பது சட்டப்படி குற்றமாகும். அது குற்றம் என்று தெரிந்திருந்தும் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இது சட்ட மீறல் ஆகும். தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டது. இது உண்மை. இந்த விவகாரத்தை எனது கவனத்திற்கும் கொண்டு வந்து, மிரட்டினார்கள். இதைவிட கிரிமினல் குற்றம் வேறொன்றும் இல்லை. இது மன்னிக்க முடியாத குற்றம்.

எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. எனது போனை ஜனதாதளம்(எஸ்) கட்சியினரும், அப்போதைய முதல்-மந்திரியும் (குமாரசாமி) ஒட்டு கேட்டனர். அதனால் தான் நான் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். எனது பதவியை ராஜினாமா செய்ததற்கு இது முக்கிய காரணம். எனது போனை ஒட்டு கேட்பதற்கு குமாரசாமிக்கு என்ன உரிமை உள்ளது என்று கேள்வி கேட்கிறேன். இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே எச்.கே.பட்டீல், பா.ஜனதாவை சேர்ந்த ஆர்.அசோக் ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். பெற்றோரே, பெற்ற பிள்ளைகளுக்கு செய்வினை செய்தது போல் எனது கட்சியினரே எனது போனை திருட்டுத்தனமாக ஒட்டுகேட்டுள்ளனர்.

முதல்-மந்திரியை, முன்னாள் மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவேகவுடா சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் இருவரும் அரசியல் பற்றி தான் பேசி இருப்பார்கள். இரு அரசியல்வாதிகள் சந்தித்து பேசினால், நிச்சயம் அரசியல் பற்றி தான் பேசுவார்கள். கர்நாடகம் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கம்போல் மைசூரு தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டும். எக்காரணம் கொண்டும் எளிமையாக தசரா விழாவை கொண்டாடக் கூடாது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய மனுவின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்துள்ளதால் எங்களுக்கு ஆதங்கம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.