சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 10:00 PM GMT (Updated: 16 Aug 2019 9:07 PM GMT)

நெல்லை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி. நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 59). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு 13 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி வியாகத் அலி கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து லியாகத் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவர் ரூ.61 ஆயிரமும், தமிழக அரசு ரூ.2 லட்சமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் பால்கனி ஆஜராகி வாதாடினார்.

Next Story