குடிநீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு கிராமசபை கூட்டங்களை நடத்துங்கள்; சோமையம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்கள் ஆவேசம்


குடிநீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு கிராமசபை கூட்டங்களை நடத்துங்கள்; சோமையம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 8:54 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டு கிராமசபை கூட்டங்களை நடத்துங்கள் என்று சோமையம்பாளையம் ஊராட்சியில், பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.

துடியலூர்,

சுதந்திர தினத்தையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடந்தது. கோவை தொண்டாமுத்தூர் அருகே வெள்ளிமலைபட்டினம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் தங்களது ஊரில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் வரப்பு கட்டித் தரப்படுகிறது. கிசான் சம்மான் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது என்றார்.

முன்னதாக பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நடந்த பொது விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டார். இதில் மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்.சுதாகர், கோ.பார்த்திபன், ஜி.கே.விஜயகுமார், ஊராட்சி செயலர் மாரப்பன், கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ், கங்கேஸ் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேவராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் செயலர் மனோகர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணம்மாள் கல்லூரி சார்பில் பேராசிரியர்கள் ஆர்த்தி, சுசீலா, சசிகலா, எழிலி ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்று பொதுமக்களிடம் மீன் கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் முறை குறித்து விளக்கினர்.

கோவை துடியலூர் அடுத்துள்ள குருடம்பாளையம், பன்னிமடை, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னத்தடாகம், அசோகபுரம், வீரபாண்டி ஆகிய 7 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்பாபு தலைமை தாங்கினார். சோமையம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட பெண்கள் கூறும்போது, ஊராட்சியில் பல இடங்களில் சுகாதார பணிகள் நடைபெறாமல் இருப்பதால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் 20 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது. அதிகாரிகளிடம் கூறினால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே முதலில் குடிநீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு கிராமசபையை நடத்துங்கள் என்று ஆவேசமாக கூறினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னத்தடாகம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகள் குறித்து தகவல் தரவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். பன்னிமடை, குருடம்பாளையம், அசோகபுரம், வீரபாண்டி ஊராட்சிகளில் தண்ணீர் சீராக வரவில்லை என்று கூறி பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதற் கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம், வெள்ளாணைப்பட்டி, அத்திப்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், கொண்டையம்பாளையம், வெள்ளமடை, கள்ளிப்பாளையம் ஆகிய 7 ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. வெள்ளமடை ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் வட்டார துணை அலுவலர் லலிதா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய சேர்மனும், சங்கமம் விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவருமான கிருஷ்ணசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி வரதராஜன் உள்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கத்தலைவர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நீலம்பூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததி இன மக்களின் முக்கிய பிரச்சினையான, அவர்களது மயானத்துக்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான நிலம் இருப்பதால் நிறுவனத்தோடு பேசி அந்த நிலத்தை தானமாக பெற்றுக்கொண்டு, அதில் நவீன எரியூட்டு மயானம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் ஷியாம் குமார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தீபா மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story