மாவட்ட செய்திகள்

மதுரை மத்திய சிறையில் மும்பை ஐ.ஜி. திடீர் ஆய்வு + "||" + Mumbai IG Sudden Inspection At Madurai Central Jail

மதுரை மத்திய சிறையில் மும்பை ஐ.ஜி. திடீர் ஆய்வு

மதுரை மத்திய சிறையில் மும்பை ஐ.ஜி. திடீர் ஆய்வு
மதுரை மத்திய சிறையில் மும்பையை சேர்ந்த சிறைத்துறை ஐ.ஜி. தீபக் பாண்டே திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை,

மும்பையில் பணியாற்றும் சிறைத்துறை ஐ.ஜி. தீபக் பாண்டே நேற்று காலை மதுரை மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறை முழுவதையும் அதிகாரிகள் அவருக்கு சுற்றி காண்பித்தனர். ஆய்வுக்கு பின்னர் ஐ.ஜி. தீபக் பாண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


மாவட்ட சிறை அந்தஸ்து கொண்ட 11 சிறைகளும், 3 மத்திய சிறைகளும் மும்பை நகரில் உள்ளன. மும்பை சிறைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள சிறைகளில் ஆய்வு நடத்தி வருகிறோம். தமிழகத்தில் சிறை நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது.

தமிழகத்தை போல் மும்பை சிறைகளை மாற்றி அமைக்கலாம் என நினைக்கிறோம். மும்பையில் காவல் துறை சார்ந்த நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், சிறை துறையை பொறுத்தமட்டில் மற்ற மாநிலங்களே சிறப்பாக உள்ளது. அதனால்தான் மும்பையில் சிறை நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.

தமிழகத்தில், காவலர் வீட்டு வசதி வாரிய கழகத்தின் கட்டுப்பாட்டில் சிறை கட்டிடங்களின் கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை நடக்கின்றன. ஆனால், மும்பையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறைத்துறை கட்டிடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டை போல், அங்கும் காவலர் வீட்டு வசதி வாரிய கழகத்தின் கீழ் சிறைத்துறையை மாற்றி அமைக்க இருக்கிறோம். இந்திய அளவில் தமிழக சிறைகள்தான் சிறப்பாக உள்ளன. தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன.

மும்பையில் அதிக அளவில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவற்றில், சிறையில் நிகழும் மரணங்கள், கைதிகளில் எண்ணிக்கை அதிகரிப்பு, சிறைகாவலர்களின் எண்ணிக்கை குறைவு போன்றவை தீர்க்கப்படாத பிரச்சினைகள். இதுதொடர்பாகத்தான் அதிக அளவில் வழக்குகள் பதிவாகின்றன. அதற்கு காரணம் மும்பையில் சிறைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே ஆகும்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக, மத்திய வாரியாக என பல சிறைகள் உள்ளன. அதன் மூலம் இந்த 3 பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுகிறது. இங்கு நடைமுறைப்படுத்துவதுபோல், மும்பையிலும் நிறைய சிறைகள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் பிற சிறைகளிலும் இதுபோல், ஆய்வு செய்து அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்புவோம். மும்பையில் சர்வதேச அளவில் குற்றவாளிகளை அடைக்கும் வகையில் வசதிகள் இருக்கிறதா? என்று லண்டன் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கான வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று சி.பி.ஐ. மூலம் பதில் அளித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர், மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் நடத்திவரும் கேன்டீனுக்கும், சிறை கார்டனுக்கும் சென்று பார்வையிட்டார். அந்த கேன்டீனில் கைதிகள் தயாரித்த தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. இதே போல் கைதிகள் தயாரித்து விற்பனைக்கு கொடுக்கும் கைவினைப் பொருட்கள் பற்றியும் சிறை அதிகாரிகளிடம் ஐ.ஜி. தீபக் பாண்டே கேட்டறிந்தார்.