பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்: கட்டாய நன்கொடை வசூலிக்க கூடாது; கணபதி மண்டல்களுக்கு அறிவுறுத்தல்


பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்: கட்டாய நன்கொடை வசூலிக்க கூடாது; கணபதி மண்டல்களுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:59 PM GMT (Updated: 17 Aug 2019 10:59 PM GMT)

பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கட்டாயப்படுத்தி யாரிடமும் நன்கொடை வசூலிக்க கூடாது என கணபதி மண்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பை, 

மும்பையில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியின் போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான மண்டல்கள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மும்பையே திருவிழாகோலம் காணும்.

மேலும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். இந்தநிலையில் கணபதி மண்டல்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மும்பை சர்வஜனிக் கணபதி விழா சங்கத்தினர் புத்தகம் வெளியிட்டுள்ளனர். அந்த புத்தகத்தில் மண்டல் நிர்வாகத்தினர் எதை செய்யலாம், செய்யக்கூடாது என விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-

கணபதி மண்டல்கள் மற்ற மதத்தினரை புண்படுத்தும் வகையில் எந்த செயல்களிலும் ஈடுபட கூடாது. அரசியல் கட்சிகளையோ அல்லது தனிநபரையோ விமர்சிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது, நன்கொடை கேட்டு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது, பிளாஸ்டிக் பைகளில் பக்தர்களிடம் இருந்து பூஜை பொருட் கள், வேண்டுதல் பொருட்களை வாங்க கூடாது.

ஒலி மாசு குறித்து ஒலிபெருக்கி அமைப்பாளருக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். பக்தி மற்றும் இன்னிசை பாடல்களை ஒலிக்க வேண்டும். குத்துபாடல்கள் ஒலிப்பதை தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது. நவீன இசைக்கருவிகள் பயன்படுத்துவதை தவிர்த்து டோல் உள்ளிட்ட பாரம்பரிய இசை கருவிகளை பயன்படுத்தலாம்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கணபதி மண்டல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், திருவிழாவில் அரசியல் கலக்கக்கூடாது என கூறியிருப்பது சரிதான். சங்கம் வெளியிட்டுள்ள பல அறிவுரைகளை ஏற்கனவே நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்றார்.

Next Story