குன்னூர் ஏல மையத்தில், ரூ.9 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை


குன்னூர் ஏல மையத்தில், ரூ.9 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 18 Aug 2019 10:15 PM GMT (Updated: 18 Aug 2019 5:47 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் ரூ.9 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஆன்லைன் மூலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15-ந் தேதி வியாழக்கிழமை சுதந்திர தினம் என்பதால் தேயிலை ஏலம் நடைபெறவில்லை. அதன்பிறகு 16-ந் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 13 லட்சத்து 59 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 9 லட்சத்து 4 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 4 லட்சத்து 55 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. இந்த ஏலத்தில் 11 லட்சத்து 26 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 84 சதவீத விற்பனை ஆகும். விற்பனையாக தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.9 கோடியே 17 லட்சம். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.252, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.270 என இருந்தது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.64 முதல் ரூ.72 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.125 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.67 முதல் ரூ.72 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.102 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது. இந்த ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.1 விலை உயர்வு இருந்தது.

அடுத்த ஏலம் வருகிற 22, 23-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 10 லட்சத்து 95 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது. 

Next Story