காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி


காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
x
தினத்தந்தி 18 Aug 2019 10:15 PM GMT (Updated: 18 Aug 2019 8:04 PM GMT)

காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.

காங்கேயம்,

காங்கேயம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 52). இவர் அந்த பகுதியில் ஆயில் மில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு காலை, மாலை நேரங்களில் டீ, காபி தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து டீ, காபி தயாரித்து கொண்டு அந்த கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு சென்றார். அந்த சமயத்தில் அங்கு சிமெண்டு கலவை கலக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

தொழிலாளர்களுக்கு டீ கொடுத்துவிட்டு குமாரசாமி கிளம்ப தயாரான போது சிமெண்டு கலவை எந்திரத்தின் அருகே வைக்கப்பட்டு இருந்த பாத்திரத்தை எடுக்க குனிந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிமெண்டு கலவை எந்திர வாகனம் குமாரசாமி மீது மோதியது. அப்போது கீழே விழுந்த அவர் மீது வாகனத்தின் சக்கரம் ஏறியது. இதில் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குமாரசாமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story