வீட்டை காலி செய்ய சொல்லி அண்ணன் மிரட்டியதால் கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க வந்த தொழிலாளி


வீட்டை காலி செய்ய சொல்லி அண்ணன் மிரட்டியதால் கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க வந்த தொழிலாளி
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 7:17 PM GMT)

வீட்டை காலி செய்ய சொல்லி அண்ணன் மிரட்டுவதாக புகார் தெரிவித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த அள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல்(வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அம்சவள்ளி. இவர்களுடைய மகன்கள் ஹரிகிருஷ்ணன்(7) 2-ம் வகுப்பும், ஹரிகரன்(4) அங்கன்வாடியிலும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சித்திரவேல் தனது மனைவி, மகன்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.

அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், சித்திரவேல் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது உள்ளே மண்எண்ணெய் கேன் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே அவர்களை ஜீப்பில் ஏற்றி தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மனஉளைச்சல்

அங்கு சித்திரவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நான் 8 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டை காலி செய்ய சொல்லி என் அண்ணன் கடந்த 1 மாதமாக வலியுறுத்தி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அவர், வீட்டை காலி செய்யவில்லை என்றால் பொருட்களை எல்லாம் அள்ளி வெளியே வீசிவிடுவதாக மிரட்டினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தேன் என கூறினார்.

இதையடுத்து அவரையும், அவரது மனைவியையும் எச்சரித்த போலீசார், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. உங்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

50 முறை மனு அளித்த விவசாயி

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(58) விவசாயி. கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மண்எண்ணெய் கேனுடன் வந்த இவர், மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்ற முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் விரைந்து சென்று மண்எண்ணெய் கேனை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தபோது, பொதுவான சாலையை சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மின் இணைப்பு வழங்க வேண்டும் என 50 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருளில் வாழ்ந்து வரும் எனக்கு விரக்தி ஏற்பட்டதால் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு மண்எண்ணெய் கேனுடன் வந்தேன் என்றார். இதையடுத்து அவரை தமிழ்ப்பல்கலைக் கழக போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Next Story