அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: சமூக அமைப்பினர் சாலை மறியல், 166 பேர் கைது


அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: சமூக அமைப்பினர் சாலை மறியல், 166 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2019 11:30 PM GMT (Updated: 19 Aug 2019 8:25 PM GMT)

அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை சமூக அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 166 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த சின்ன வீராம்பட்டினத்தில் மணற்பரப்புடன் அமைந்த கடற்கரை பகுதி உள்ளது. இந்த கடற்கரையின் அழகை ரசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த சிலர் மதுகுடித்துவிட்டு போதையில் ஆட்டம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது.

அதனைப்பார்த்த அப்பகுதியில் உள்ள பட்டதாரி இளைஞரும் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தினேஷ் என்பவரும் அந்த நபர்களை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடமாநில சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்ததாக தினேஷை தட்டிக் கேட்டனர். மேலும் தினேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக சமூக அமைப்புகளின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் பெரியார் திராவிட கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், அமுதவன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், நாம்தமிழர் கட்சி இளங்கோ, திராவிடர் கழக சிவவீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழக வீரமோகன் மற்றும் இளங்கோவன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், தமிழர் களம் அழகர் உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும், அரிக்கன்மேடு பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும், பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கண்டன கோஷங்களுடன் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தினர் அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது, போலீசார் சாலையின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அதனால் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜியிடம் ஊர்வலமாக வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசாரை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் செய்தனர். இந்த மறியல் காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன் மற்றும் தாசில்தார் ராஜேஷ்கண்ணா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர்.

அதனை தொடர்ந்து அனுமதியின்றி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 166 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவுதம் சிவகணேஷ், செந்தில்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலம் மற்றும் சாலை மறியலால் அரியாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவியது, ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story