மாணவ-மாணவிகள் தொடர் தற்கொலை சம்பவம்: தனியார் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


மாணவ-மாணவிகள் தொடர் தற்கொலை சம்பவம்: தனியார் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

மாடியில் இருந்து குதித்து மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தனியார் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் உள்பட பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பல்கலைக்கழக விடுதி மற்றும் அருகிலுள்ள ஊர்களில் தங்கி படித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அழிஞ்சிவாக்கம் சாய்கிருபா நகர் பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரது மகள் அனுப்பிரியா (வயது 21). இவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக்., பயோமெடிக்கல் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த ஆண்டு மே மாதம் 26-ந் தேதி கல்லூரி விடுதியில் உள்ள 10-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருஷ் சவுத்ரி என்பவரது மகன் அனிஷ் சவுத்ரி (19) விடுதியில் உள்ள 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் பி.டெக்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். அடுத்தடுத்த நடந்த 2 தற்கொலை சம்பவங்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அதிர்ச்சி சம்பவங்கள் மறைவதற்குள் கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரது மகன் ஸ்ரீராகவ் (21), பி.டெக்., 4-ம் ஆண்டு படித்து வந்த அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஐ.டி. பார்க் கட்டிடத்தின் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொடர் தற்கொலை சம்பவங்கள் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்களின் தொடர் தற்கொலை சம்பவங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மல்லிகா தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு நேற்று காலை நேரில் சென்று மாணவர்களின் தொடர் தற்கொலை சம்பவங்கள் குறித்து சக மாணவர்களிடமும், வகுப்பு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நேற்று விசாரணை நடத்திய சம்பவம் பல்கலைக் கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story