மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்: அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவது எப்போது? பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி


மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்: அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவது எப்போது? பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 21 Aug 2019 3:45 AM IST (Updated: 21 Aug 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக கடந்த 2009-ம் ஆண்டு எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் பிளாசா வழியாக செல்லும் அண்ணாசாலை மூடப்பட்டது. இதையடுத்து இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணாசாலை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் அண்ணாசாலை வழியாக செல்ல வேண்டியவர்கள் அதிக தூரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் நேரமும், எரிபொருளும் அதிகம் செலவிட வேண்டியிருந்தது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர்பாதை மட்டும் ஒரு வழி சாலையாக இயங்கி வந்தது.

சாலை திறப்பு எப்போது?

தற்போது அண்ணாசாலை, பகுதியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து ரெயில்கள் இயங்கத்தொடங்கின. இருந்தாலும் இந்த சாலையில் ஒரு சில இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் அண்ணாசாலையில் மூடப்பட்ட சாலை முழுவதும் போக்குவரத்துக்காக கடந்த 3-ந்தேதி முழுமையாக திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் அண்ணாசாலைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது என்று எண்ணிய வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் மீண்டும் சாலை திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் செல்வதால் தினசரி அலுவலக நேரம் மட்டும் அல்லாது பகல், இரவு நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் காணப்படுகிறது. எனவே இந்த சாலை பணிகளை விரைந்து முடித்து இருவழிப்போக்குவரத்துக்கு திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மூடப்பட்ட சுரங்கப்பாதைகளையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட சாலை தற்போது பணிகள் நிறைவடைந்து மீண்டும் விரைவில் திறக்கப்பட உள்ளது. ஆனால் அண்ணாசாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதுபோல் மாற்றப்படவில்லை. தற்போது ஆங்காங்கே சாலையில் பேட்ஜ் போட்டது போன்று பிட், பிட்டாக சாலைகள் போடப்பட்டு உள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலையை கடப்பதாக இருந்தால் சுரங்கப்பாதை மூலமாக மட்டுமே கடக்க முடியும். மாறாக சாலையில் கடக்கவே முடியாது. ஆனால் தற்போது அண்ணாசாலையில் தற்காலிகமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சாலையை கடப்பதற்கு வழிவகுப்பதுடன், விபத்துகளில் சிக்கி உயிர்பலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அண்ணாசாலையில் அமெரிக்க தூதர அலுவலகம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள 2 சுரங்கப்பாதைகள் பராமரிப்பு செய்யப்படுவதாக கூறி பல மாதங்களாக மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்தப்பகுதிகளில் சாலைகளை பொதுமக்கள் போக்குவரத்து பிரிவு போலீசாரின் உதவியுடன் சாலையை கடக்கின்றனர்.

குறிப்பாக எல்.ஐ.சி.யில் இருந்து அமெரிக்க துணை தூதரகம் வரை உள்ள பகுதிகளில் ஒயிட்ஸ் ரோடு, அண்ணாசாலை- திரு.வி.க.ரோடு, ஸ்மித்ரோடு, ஸ்பென்சர், வெலிங்டன் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இருந்தன. இதில் தற்போது ஸ்பென்சர் அருகில் மட்டுமே போக்குவரத்து சிக்னல் உள்ளது. மீதும் உள்ள எந்த இடத்திலும் சிக்னல்கள் அமைத்து தரப்படவில்லை. அவற்றை உடனடியாக அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஆயிரம்விளக்கு- எல்.ஐ.சி. இடையே இருவழிப்போக்குவரத்துக்காக சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்படி போக்குவரத்து சிக்னல்கள், நடைமேடைகள், சாலை தடுப்புகள் போன்றவை அமைத்து தரப்படும்.

இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. விரைவில் இந்த சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story