புனேவில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்; மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி


புனேவில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்; மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 21 Aug 2019 11:30 PM GMT (Updated: 21 Aug 2019 6:32 PM GMT)

புனேவில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ கோடியை மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆசனூர் வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் வாகனங்களும், தமிழ்நாட்டில் இருந்து தாளவாடி வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களும் இந்த சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை செய்யப்படும்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தமிழக-கர்நாடக எல்லையான அட்டுகுழிபுரத்தில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆசனூர் வழியாக கள்ளநோட்டுகள் தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் கொண்டுசெல்லப்பட்டு புழக்கத்தில் விடப்படலாம் என்று ஆசனூர் சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் பணியில் இருந்தார்கள். அப்போது அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து மராட்டிய மாநில பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினார்கள். காருக்குள் 2 பேர் இருந்தார்கள். 2 பேரையும் காரை விட்டு இறங்க சொல்லி சோதனை நடத்தினார்கள். அப்போது காருக்குள் இருந்த ஒரு பையில் கட்டுக்கட்டாக 200, 500, 2000 நோட்டுகள் என மொத்தம் ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அனைத்தும் நல்ல நோட்டுகள்.

இதைத்தொடர்ந்து பணப்பையை வெளியே எடுத்த போலீசார், காரில் வந்த 2 பேரிடமும் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ரோகன்குமார், பைஜூ ஆகியோர் என்பது தெரிந்தது.

இருவரும் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தோட்டம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறினார்கள். ஆனால் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதனால் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அதை தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசுவிடம் ஒப்படைத்தார்கள்.

உண்மையிலேயே ரோகன்குமாரும், பைஜூவும் கொச்சியில் தோட்டம் வாங்கத்தான் அந்த பணத்தை கொண்டு சென்றார்களா? அல்லது அது ஹவாலா பணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டி அதை நிரூபித்தால் மீண்டும் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை நடந்த சோதனையில் காரில் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story