இந்தியாவில் முதன் முறையாக நிதி-மனிதவள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது


இந்தியாவில் முதன் முறையாக நிதி-மனிதவள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் முதன் முறையாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கருவூல கணக்குதுறை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கருவூல கணக்குத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜவகர் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்க ஆயத்தக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கருவூலக்கணக்குத்துறை அரசு முதன்மைச்செயலாளரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கருவூல கணக்குதுறை அரசு முதன்மைச்செயலாளரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் பேசியதாவது:-

தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டத்தை செயல்படுத்திட மாநில கருவூல கணக்குத்துறையின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதிமேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் மாதிரித்திட்டமாக செயல்படுத்தப் படவுள்ளது.

பயனடைவார்கள்

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகத்தை மிகத்துல்லியமாக நடத்த இயலும். அரசு பணியாளர்களை மிகச்சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியர்்கள் பயனடைவார்கள். இத்திட்டம் மாநிலக் கணக்காயர் அலுவலகம், வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் கருவூல கணக்குத்துறையின் மண்டல, மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு தேவையான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றது.

செலவினங்கள்

கரூர் மாவட்டத்தில் 337 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 13,384 அரசு பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதரபட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஜூலை மாதத்தில் கரூர் மாவட்டத்தில் ரூ.65 கோடியே 51 லட்சத்து 42 ஆயிரத்து 253 சம்பளமாக கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் 7,805 ஓய்வூதியர்களுக்கு ரூ.16 கோடியே 11 லட்சத்து 8 ஆயிரத்து 882 ஓய்வூதியமாக மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. சம்பளமில்லா பட்டியல்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறுத்திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் வாயிலாக ரூ.20 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரத்து 632-க்கு செலவினங் கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

ஏற்கனவே, நடைமுறையில் உள்ள திட்டங்களில் பட்டியல் தயாரித்து, கடவுச்சொல் மூலம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதற்கு 8 முதல் 12 நாட்கள் வரையாகிறது. ஆனால், இப்புதிய திட்டத்தில், ஒரேநாளில் பட்டியலை தயாரித்து, இணையம் வாயிலாக கருவூலத்தில் சமர்ப்பித்து, பயனாளியின் வங்கிகணக்கில் உடனடியாக வரவுவைக்க இயலும். இத்திட்டத்தால் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படைதன்மையுடன் துரிதசேவையை மக்களுக்கு வழங்க இயலும்.

100 சதவீதம் நிறைவு

கரூர் மாவட்டத்தில் 13,384 நபர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, மின்-பணிபதிவேடுகளாக மாற்றும் பணி 100 சதவீதம் நிறைவு செய்யப்பட்டு்ள்ளது. இந்தப்பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் தன்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்து கொள்கின்றேன்.

இவ்வாறு தெரிவித்தார்.

இதில் கூடுதல் இயக்குனர்கள் (மின்ஆளுகை) மகாபாரதி, கிருபானந்தம், சந்திரன், மண்டல இணை இயக்குனர் (கோவை) பூங்கோதை, இணை இயக்குனர் புவியரசு, இணை இயக்குனர்(மின் ஆளுகை) ஆதவன் மற்றும் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த மண்டல இணை இயக்குனர்கள், கரூர் மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன், இதர மாவட்ட கருவூல அலுவலர்கள், கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உதவி கருவூல அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story