ப.சிதம்பரம் மீதான வழக்கில் சட்டம் தன் கடமையை செய்கிறது ஜி.கே.வாசன் பேட்டி


ப.சிதம்பரம் மீதான வழக்கில் சட்டம் தன் கடமையை செய்கிறது ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2019 4:45 AM IST (Updated: 22 Aug 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரம் மீதான வழக்கில் சட்டம் தன் கடமையை செய்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்சி,

ப.சிதம்பரம் ஒரு மூத்த வக்கீல். அவருக்கு சட்டம் தெரியும். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அது தன் கடமையை செய்கிறது. கோர்ட்டு தீர்ப்பின்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். சி.பி.ஐ. விசாரணை முடிவடைந்து, கோர்ட்டு உத்தரவு வந்த பின்னர் தான், ப.சிதம்பரம் மீதான வழக்கில் அரசியல் சாயம் உள்ளது என்று கூறும் எதிர்க்கட்சியினருக்கு உண்மை நிலை தெரியவரும்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது என்பது காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய பகுதி மக்களுக்கு வளர்ச்சி ஏற்படவும், எதிர்கால நன்மையை கருதியும் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். இது சம்பந்தமாக தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தக்கூடாது. இதற்கு மாநில அரசு அனுமதிக்கக்கூடாது. வேலையில்லா திண்டாட்டம் என்பது கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி தொடரும் நிலையில்தான் உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மாவட்டங்களை பிரிப்பது அந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகத்தான்.

தமிழக முதல்-அமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பொருளாதார ரீதியாக தமிழகம் உயரவும், புதிய தொழிற்சாலை அமையவும், மக்களுக்கு பயன்படக்கூடிய பயனுள்ள சுற்றுப்பயணமாக அமையும் என்று நம்புகிறேன். முக்கொம்பு அணை உடைந்து ஒரு வருடம் ஆகிய நிலையில், அதற்கான பணிகளை காலக்கெடு நியமித்து விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story