மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது
புதுவையில் மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை கோவிந்தசாலை பகத்சிங் வீதியை சேர்ந்தவர்கள் லாரண்ட் கிளாரா (வயது 70) மற்றும் தேவி (வயது 65). சகோதரிகளான இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இவர்களது வீட்டிற்குள் பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்தார். அவரிடம் யார்? எதற்காக வந்தார் என தேவி விசாரித்தார். ஆனால் அந்த பெண் எதுவும் கூறாமல் தேவியை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவி சத்தம்போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிளாரா வந்து தடுக்க முன்றார். ஆனால் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அந்த பர்தா அணிந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தப்பிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், முருகன், புனிதராஜ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகைகளை பறித்தவர் கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுப்ரமணியின் மனைவி மங்கலேசுவரி (வயது 60) என தெரியவந்தது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவர் நகரப்பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. கடன் தொல்லை தாங்காமல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு மங்கலேசுவரியை கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் பாராட்டினார்.
Related Tags :
Next Story