குடிமங்கலம் பகுதியில் 15 பேரை கடித்து குதறிய வெறிநாய் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


குடிமங்கலம் பகுதியில் 15 பேரை கடித்து குதறிய வெறிநாய் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 24 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 7:16 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் வெறிநாய் ஒன்று 15 பேரை கடித்து குதறியது. இதில் காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடிமங்கலம்,

தேங்கி நிற்கும் கழிவு நீர், குவிந்து கிடக்கும் குப்பை ஆகியவற்றால் ஈ மற்றும் கொசுத்தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இது போன்ற நோய்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானாலும் மறுபக்கம் சமீப காலமாக நாய் கடிக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கட்டுப்பாடற்ற அவற்றின் இனப்பெருக்கம், பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது.

உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெறி நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. வெறி நாய்க்கடியால் உருவாகும் ரேபிஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. குடிமங்கலம் பகுதியில் வெறி நாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை பலரையும் கடித்து குதறியது.  இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

வெறி நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். முன்பு வெறிநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. அதற்கான அடையாள வில்லை நாய்களின் கழுத்துப்பட்டையில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். இந்த அடையாளம் இல்லாமல் தெருவில் சுற்றித்திரியும் வெறி நாய்களை உள்ளாட்சி நிர்வாகங்களின் பணியாளர்கள் பிடித்து சென்று விடுவார்கள். இதனால் வெறி நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. இந்தநிலையில் வெறி நாய்களை கொல்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வெறிநாய்களை கொல்லும் முறை கைவிடப்பட்டது.

 வெறி நாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதியில் விட்டு வந்தனர். பல வருடங்களாக அந்த திட்டம் முடங்கிக் கிடக்கிறது. இதனால் வெறி நாய்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடமாடவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

 குடிமங்கலம் பகுதியில் வெறி பிடித்த நாய் ஒன்று சுற்றி வந்தது. அந்த நாய் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்து குதறியது. மேலும் அதிகாலையில் குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த கொள்ளுப்பாளையத்தை சேர்ந்த காவலாளி கந்தன் (வயது 65) என்பவரை கடித்தது. இதையடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த வெறிநாய் வேலப்பநாயக்கன் புதூரை சேர்ந்த ரங்கன் (64), பொன்னி என்கிற அன்னபூரணி (50), ஜனார்த்தனன், திருமூர்த்தி, ஆறுமுகம், ரங்கன், கோவிந்தராஜ், குப்புசாமி, கோட்டமங்கலத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பிரவீன், குடிமங்கலத்தை சேர்ந்த மாணிக்கம் உள்பட 15 பேரை கடித்து குதறியது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த கந்தன், ரங்கன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொன்னி என்கிற அன்னபூரணி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே குடிமங்கலம் பகுதியிலுள்ள அனைத்து வெறி நாய்களை பிடித்து அவற்றுக்கு தடுப்பூசி போடவும், கருத்தடை செய்து நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story