தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: தஞ்சை பெரியகோவிலில் போலீஸ் பாதுகாப்பு - பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதி


தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: தஞ்சை பெரியகோவிலில் போலீஸ் பாதுகாப்பு - பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதி
x
தினத்தந்தி 23 Aug 2019 10:30 PM GMT (Updated: 23 Aug 2019 8:38 PM GMT)

தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக தஞ்சை பெரியகோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்,

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை உஷார் படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவில் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இங்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலையடுத்து பெரியகோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிரெக்டர் கருவி மூலம் பலத்த சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த உடமைகளையும் போலீசார் சோதனை செய்தனர்.

ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் அதிரடியாக வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டனர்.

Next Story