குளங்களை தூர்வாரக் கோரி அதிகாரி முற்றுகை; கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு


குளங்களை தூர்வாரக் கோரி அதிகாரி முற்றுகை; கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 4:25 PM GMT)

நெட்டப்பாக்கம் அருகே குளங்களை தூர்வாரக்கோரி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நெட்டப்பாக்கம்,

புதுச்சேரி உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்பேரில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி செம்பியப்பாளையம் பஞ்சாயத்து சார்பில் அங்குள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரி ராணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்கள், செம்பியப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இதுவரை நடந்த கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. கொம்யூன் சார்பில் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே இங்கு வந்துள்ளர்கள், குளங்கள் தூர்வாரப்படவில்லை என அதிகாரி ராணியை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் மற்றும் அதிகாரிகள் செம்பியப்பாளையம் கிராமத்துக்கு விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நத்தமேடு அம்சா குளம், புதுக்குப்பம் மோட்ச குளம் ஆகியவற்றை உடனே தூர்வார வேண்டும், ஏம்பலம்- கம்பளிக்காரன் குப்பம் சாலையில் உள்ள அம்மச்சி அம்மன் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஆணையர் மனோகர் உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் செம்பியப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story