வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: நாமக்கல், ராசிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல், ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராசிபுரம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும், சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ஆதவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அரசன், மாவட்ட துணை செயலாளர் நீலவானத்து நிலவன், ராசிபுரம் தொகுதி செயலாளர் செங்குட்டுவன், தொகுதி துணை செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில நிர்வாகிகள் வைகறைச்செல்வன், பிரபாகரன், மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, நாமக்கல் பூங்கா சாலையில் தமிழர் விடுதலை களம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மகளிர் அணி தலைவர் அன்னகிளி, நகர செயலாளர் ரகு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை உடைத்த மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்ததற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரமேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story