கர்நாடகத்தில், பா.ஜனதா அரசு செயல்பட தொடங்கி ஒரு மாதம் ஆகிறது - மந்திரி சி.டி.ரவி பேட்டி
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு செயல்பட தொடங்கி ஒரு மாதம் ஆகிறது என்று மந்திரி சி.டி.ரவி கூறினார். கர்நாடக சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று சித்தராமையா சொல்கிறார். மூடநம்பிக்கை தடை சட்டத்தை கொண்டுவர சித்தராமையா ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் இப்போது அரசின் எதிர்காலத்தை கணித்து சொல்கிறார். இதை அவர் எப்படி கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை.
எங்கள் அரசு இன்னும் 3 ஆண்டு 9 மாதங்கள் ஆட்சி செய்யும். நீண்டகால திட்டங்களை கொண்டுவர உள்ளோம். அதுபற்றி யாருக்கும் சந்தேகம் வேண்டாம். காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா முக்கியமான தலைவர் என்று நாங்கள் கருதி கொண்டிருக்கிறோம். அந்த கட்சியில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
காங்கிரசில் சித்தராமையாவின் கால்களை இழுத்துவிட நிறைய பேர் உள்ளனர். அவர் தனது கால்களை யாரும் இழுக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளட்டும். எங்கள் பா.ஜனதா அரசு செயல்பட தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. சிக்கமகளூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் தரை இறங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. அவர் பெயருக்கு ஆய்வு செய்தார் என்று குறை சொல்வது சரியல்ல.
மூடிகெரே தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலைமனே கிராமத்தில் எடியூரப்பா ஆய்வு செய்தார். சாதம் வெந்துவிட்டதா? என்பதை பார்க்க ஒரு அரிசியை பதம் பார்த்தால் போதும். அனைத்து அரிசிகளையும் எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
4, 5 கிராமங்களில் அவர் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார். நேரம் இல்லாத காரணத்தால் அந்த கிராமங்களுக்கு எடியூரப்பா செல்லவில்லை. மீதம் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வீடியோ மூலம் முதல்-மந்திரிக்கு தகவலை தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு மந்திரி சி.டி.ரவி கூறினார்.
Related Tags :
Next Story