பள்ளிப்பட்டு ஏரியை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை


பள்ளிப்பட்டு ஏரியை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2019 10:30 PM GMT (Updated: 29 Aug 2019 6:50 PM GMT)

பள்ளிப்பட்டு ஏரியை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கீழ் 40 ஏரிகளும், சிறு பாசன ஏரிகள் 105-ம் உள்ளன. இவற்றில் பள்ளிப்பட்டு ஏரி மிக பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரி 3 பாகங்களாக உள்ளது. இதில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள புதுப்பட்டு, தளவாய்பட்டடை பகுதிகளில் இருபாகமும், ஆந்திரமாநிலத்தில் ஒரு பாகமும் அடங்கியுள்ளது.

இவற்றில் புதுப்பட்டு பகுதியில் 56.715 ஹெக்டர் பரப்பளவிலும், தளவாய்பட்டடை பகுதியில் 30.35 ஹெக்டர் பரப்பளவிலும் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நிரம்பினால் பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான குளங்களும், ஆயிரக்கணக்கான கிணறுகளும் தண்ணீரால் நிரம்பி வழியும். பயிர் பாசனத்திற்கும் குறைவின்றி தண்ணீர் கிடைக்கும்.

மேலும் பள்ளிப்பட்டு பேரூராட்சியை சுற்றியுள்ள புதுப்பட்டு, முனிரெட்டிகண்டிகை, புதுப்பட்டு காலனி, ஈச்சம்பாடி, ஈச்சம்பாடி காலனி, முனிரெட்டிகண்டிகை காலனி, பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த சூரராஜுபட்டடை, குதிரைமேடு, கேசவராஜுகுப்பம், சி.ஆர்.பட்டடை, ராமச்சந்திராபுரம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசனத்திற்கு தண்ணீர் பெறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிப்போய் காணப்படுகின்றன. பள்ளிப்பட்டு ஏரியும் தண்ணீர் இல்லாமல் வற்றி காணப்படுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் ஏரியை ஆக்கிரமித்து விளை நிலங்களாக மாற்றி கரும்பு போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். மேலும் சிலர் இந்த ஏரியை கால்நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலமாக மாற்றி வருகின்றனர்.

இதனால் பள்ளிப்பட்டு ஏரி ஆழம் குறைந்து காணப்படுகிறது. கரைகளும் பலவீனமாக உள்ளது. ஏரியில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்களும் பல இடங்களில் புதைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் மழை பெய்தாலும் ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது. பாசனத்திற்கும் பயன்படாது.

தற்போது தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புக்குள்ளான பள்ளிப்பட்டு ஏரியை தூர் வாரி கரைகளை வலுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story