கடைமடைக்கு தண்ணீர் வராததால் ஆவேசம்: எலியை கடித்து, கத்தியால் கழுத்தை அறுப்பதுபோல் விவசாயிகள் போராட்டம்


கடைமடைக்கு தண்ணீர் வராததால் ஆவேசம்: எலியை கடித்து, கத்தியால் கழுத்தை அறுப்பதுபோல் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:15 AM IST (Updated: 31 Aug 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

கடைமடைக்கு தண்ணீர் வராததால் ஆவேசமடைந்த விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியை கடித்து, கத்தியால் கழுத்தை அறுப்பதுபோல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக வந்தனர். கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், காலை 10.30 மணிக்கு அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திரளாக வந்தனர்.

திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பச்சைத்துண்டுகளுடன் திரண்ட அவர்கள், மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி திடீரென தலைகீழாக நின்று கோஷம் எழுப்பினர். சில விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்தனர். சிலர் தரையில் முட்டிப்போட்டுக்கொண்டு அழத் தொடங்கினர். அவர்களில் ஒரு விவசாயி, விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்யாததால் வறுமையால் சாப்பாட்டிற்கே வழியின்றி தவிப்பதாக கூறி எலி ஒன்றை வாயில் கடித்தபடி கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார்.

மற்றொரு விவசாயி கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பது போல் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைப்பார்த்த மற்ற விவசாயிகள் பதறிப்போய் கத்தியை பறித்து தடுத்தனர். உடனே அந்த விவசாயி, ‘வங்கிகளில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் 140 நாட்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். ஆனால், எங்கள் உணர்வை அரசு மதிக்கவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. எனவே, தற்கொலை முடிவு எடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு 17 நாட்கள் ஆகின்றன. அந்த தண்ணீர் இன்னும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசன வாய்க்கால்களுக்கு வரவில்லை. எனவே, மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுவதை அதிகரித்தால்தான் கடைமடைக்கு தண்ணீர் வரும். விவசாயிகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாத நிலையில்தான் இதுபோன்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார்.

இது பற்றி தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று விவசாயிகளை சமாதானம் செய்தனர். அதற்கு விவசாயிகள் தரப்பில், அரசு எங்களை கண்டுகொள்ள மறுக்கிறது. எங்களை தடுக்காதீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கலெக்டர், வருவாய் அதிகாரி, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் காரில் வந்தனர். அங்கு விவசாயிகள் போராடுவதை கண்டு கொள்ளாமல் வேகமாக அவர்கள் சென்று விட்டனர். அதைக்கண்ட விவசாயிகள், ‘டெல்லியில் போராட்டம் நடத்தினோம். ஆளுங்கட்சியினர் சந்திக்கவில்லை. தமிழகத்தில் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் நிலையை எப்போதுதான் அவர்கள் புரிந்து கொள்வார்களோ?’ என்று வேதனைப்பட்டனர்.

பின்னர் போராட்டத்தை கைவிட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடைமடை பாசனத்திற்கு மேட்டூர் அணையில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்யும் அளவுக்கு மழையும் பெய்யவில்லை. இன்னும் வறட்சி நீங்கவில்லை. வங்கிகள் கடனுக்காக, அடியாட்களை வைத்து விவசாயிகளின் டிராக்டரை ஓட்டிச்செல்கிறார்கள். சட்டப்படிதான் டிராக்டரை எடுக்க வேண்டும் என்பதை கேட்பதில்லை. விவசாயிகளின் அடகு நகைகளை கூட பவுன் ரூ.29 ஆயிரம் பெறும் நகையை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை ஏலத்தில் விடுகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்கவும் மறுக்கிறது. எனவே, அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், ஜப்தி நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். மேட்டூரில் கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் தலைமையிலான விவசாயிகள் சிலர், கலெக்டர் அலுவலக வளாகத்தில், சம்பா நெல் சாகுபடி செய்ய கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகள் பயிர்க்கடன் வழங்க மெத்தனம் காட்டுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Next Story