திருவாடானையில் திருமண வீடுகளில் கள்ளநோட்டு மாற்றும் கும்பல் சிக்கியது - மொய் பணத்தை திருடியபோது பிடிபட்டனர்


திருவாடானையில் திருமண வீடுகளில் கள்ளநோட்டு மாற்றும் கும்பல் சிக்கியது - மொய் பணத்தை திருடியபோது பிடிபட்டனர்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:45 AM IST (Updated: 2 Sept 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

திருமண வீடுகளில் கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல், மொய் பணத்தை திருடியபோது சிக்கினர். மதுரையை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்கு தெருவில் உள்ள ஒரு திருமண மகாலில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் ரூ.500-ஐ கொடுத்து மொய் எழுதுவது போல் பாவனை செய்ததுடன் அருகில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மொய் பணம் ரூ.20ஆயிரத்தை திருடி அருகில் நின்ற பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சிலர் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.

உடனே அந்த 2 பேரும் அவர்களுடன் சிலரும் வேகமாக திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி மண்டபத்தின் வெளியே நின்று கொண்டிருந்த சுமோ காரில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். உஷாரான திருமண வீட்டார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர்.

இதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். 2 பெண்கள் உள்பட 3 பேரை மடக்கி பிடித்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாடானை போலீசார், 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(வயது 34), காசம்மாள்(40), முத்தம்மாள்(50) என்பது தெரியவந்தது. திருமண விசேஷங்கள் போன்ற அதிக கூட்டம் உள்ள இடங்களில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மற்றும் திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்ததுடன் இந்த கும்பல் பயன்படுத்திய சுமோ காரையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல் வேறு எங்கெங்கு இதேபோல கைவரிசை காட்டியுள்ளனர், கள்ள நோட்டுகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே போன்ற சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாடானை பகுதியில் சி.கே.மங்கலத்தில் உள்ள ஒரு திருமண மகாலில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story