புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் - கலெக்டர் தகவல்


புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 7:02 PM GMT)

மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,

தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதுடன், வங்கிக்கடன் மானியமும் வழங்கி வருகிறது. புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கிட புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

அதுபோல், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பல்வேறு தொழில்கள் தொடங்கிட முறையே ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், தேனி மாவட்டத்தில், 2011-2012-ம் நிதியாண்டு முதல் 2018-2019-ம் நிதியாண்டு வரை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 71 நபர்களுக்கு ரூ.9 கோடியே 94 லட்சத்து 85 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.2 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 764 இளைஞர்களுக்கு ரூ.11 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரம் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. இதில், ரூ.2 கோடியே 83 லட்சத்து 90 ஆயிரம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு மானியமாக ரூ.5 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story